இப்படி ஒரு செய்தி நேற்று எல்லா ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு வந்ததை அவதானித்தேன்.
Sri Lankan rupee (LKR), Asia’s worst performing currency this month - Bloomberg.
அதாவது ப்ளூம்பேர்க் ஆய்வின்படி இம்மாதம் ஆசியாவில் மிகவும் பலவீனமான (மதிப்பு குறைந்த) நாணயமாக இலங்கை ரூபாய் இருக்கிறதாம்.
அப்படியென்றால் என்ன? சிம்பிளாகச் சொன்னால், டொலர் தட்டுப்பாடு. அத்தனை அத்தியாவசியப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு டொலர் தேவை. அந்தத் தேவையான டொலரை வாங்குவதற்கு இப்போது இலங்கை முன்னரை விட அதிகமான ரூபாயைச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. டொலரின் விலை உயர்ந்தால், ரூபாயின் மதிப்பு குறையும். அவ்வளவுதான்!
இது ரொக்கட் சயன்ஸ் அல்ல. புரிந்துகொள்வது எளிது. ஆனால் நான் சொல்லவந்தது அதுவல்ல.
ப்ளூம்பேர்க் அறிக்கையில் இலங்கை ரூபாய் வேகமாக மதிப்பிழப்பதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டு போகிறார்கள். அந்த பட்டியலில் சுவாரஷ்யமான ஒரு காரணமும் இருந்தது.
இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் சரியப் போகிறது என்கிற ஒரு பயம் மக்களிடத்தில் இப்போது பரவலாக ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் பெரும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் ஒலிவாங்கிகளுக்கு முன்னால் நின்றுகொண்டு இன்னும் இத்தனை மாதங்களில் இலங்கைப் பொருளாதாரம் சரிந்து செத்துப்போய்விடும் என்று அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் மீது இந்தப் பீதி சதா அமிலம் போல ஊற்றப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. விஷயம் இதுதான், ‘இந்த இலங்கையர்களின் அதீத ‘பயம்’ இலங்கை ரூபாய் பலவீனமாவதற்கு ஒரு முக்கிய காரணம்’ என்கிறது ப்ளூம்பேர்க். Interesting!
அது எப்படி?
2022 போல இன்னும் சில மாதங்களில் இலங்கைப் பொருளாதாரம் சரிந்துவிடப்போகிறது என்கிற பயம் வந்தவுடன் அடிப்படைப் பொருளியல் அறிவுடைய மக்களும், நிதி நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும், வங்கிகளும் முதலில் என்ன செய்வார்கள்? கால் தெறிக்க ஓடிப்போய் தங்களிடமிருக்கும் ரூபாய்களைக் கொடுத்து டொலரை வாங்குவார்கள். இறக்குமதியாளர்கள் தங்களுக்கு வருமானமாகக் கிடைத்த டொலர்களை இலங்கை ரூபாய்க்கு மாற்றாமல் அப்படியே பதுக்கி வைப்பார்கள். இப்படிச் செய்கிறபோது இலங்கை ரூபாய்க்கு என்ன நடக்கும்?
ஒரு பொருளின் கேள்வியும், அதை வாங்குபவர்களும் திடிரென்று அதிகரிக்கும் போது என்ன நடக்கும்? அந்தப் பொருளின் விலை அதிகரிக்கும்!
இதுதான் இங்கு நடக்கிறது. டொலருக்கு தட்டுப்பாடு வரும் என்று நினைத்து, மக்களும் வியாபாரிகளும் முந்தியடித்துக்கொண்டு அதை வாங்குகித் தள்ளும்போது அந்த டொலரின் கேள்வி உயருகிறது. அதனால் அதன் விலை உயர்கிறது. டொலரின் விலை உயர்ந்தால் இலங்கை ரூபாயின் பெறுமதி குறையும். இவ்வளவுதான் இந்தச் சூத்திரம்.
ஆக, இலங்கையர்களின் பொருளாதாரம் பற்றிய ‘பயமும்’ இலங்கை ரூபாய் வலுவிழப்பதற்கு ஒரு காரணமாய் இருக்கிறது பாருங்கள். இதன் அடிப்படையில் நீங்கள் இன்னுமொரு முரட்டுத்தனமான முடிவிற்கும் வரலாம். தற்போதைய உலக பொருளாதார நெருக்கடியை முன்வைத்து, ஆசியாவில் இலங்கை ரூபாய்தான் மிகவும் பலவீனமானது என்றால் - அதற்கு மக்களின் பயமும் ஒரு முக்கிய காரணம் என்றால் - ஆசியாவிலேயே எதிர்காலம் பற்றிய அதிகமான ‘பயத்தோடு’ சுற்றிக்கொண்டிருப்பவர்கள் இலங்கையர்கள்தான் போலிருக்கிறது. (இந்த முடிவிற்கு ப்ளூம்பேர்க் வரவில்லை!).
மனிதர்களுடைய பயம் இபோலா வைரஸ் போன்றது. மிக வேகமாகவும் தீவிரமாகவும் பரவக்கூடிய சாமான். இது பரவ அரம்பித்துவிட்டால், மக்கள் இதன் காரண காரியத்தைப் பற்றி சிந்திக்கமாட்டார்கள். அதற்கு நேரம் இருக்காது. மக்களின் இந்தப் பயம் அதிகரிக்க அதிகரிக்க டொலரின் கேள்வி அதிகரித்துக்கொண்டு போகும். ரூபாயும் தன் பெறுமதியை இழந்துகொண்டு போகும். இறக்குமதிக்கு அதிகமான பணத்தைச் செலவு செய்ய வேண்டிவரும்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலை மலைபோல் ஏறிச் சிரிக்கப்போகிறது.
